Showing posts with label தமிழகம் தமிழனின் கனவு. Show all posts
Showing posts with label தமிழகம் தமிழனின் கனவு. Show all posts

Tuesday, 5 November 2013

படித்ததில் பிடித்தது!

தமிழகம் பற்றிய ஒவ்வொரு தமிழனின் கனவு இது!
=========================================

கட்டிய மனைவியை
கரையில் காக்கவைத்து
கட்டுமரம் ஏறி
கடலுக்குள் சென்றவன்
கட்டுடலில் குண்டு பாயாமல்,
கரை வந்துச் சேர வேண்டும்.

கல் மனங்கள் கரைய வேண்டும் எங்கள்
கல்லணை நிறைய வேண்டும்
கண்ணீர் சிந்தும் கருப்பு வைரங்கள்
கம்பீரமாய் வாழ வேண்டும்.

பள்ளிச் சென்ற மாணவி
பாவிகளிடம் சிக்காமல்
பாவாடை கசங்காமல்
பத்திரமாய் வீடு வந்துச்
சேர வேண்டும்.

வங்கிக் கணக்கில் வற்றாத
வரவு இல்லாவிட்டாலும்
வங்கி அதிகாரிகள் எங்களையும்
வரவேற்று இன்முகத்துடன்
வாய்மொழிய வேண்டும்.

வரிச்சலுகை வழங்கா விட்டாலும்
வணிகக் கடை பெயர் பலகைகளில்
வண்ணமாய் தமிழ் வாழ வேண்டும்.

பணத்தைப் பிடுங்கிக் கொண்டு
பால் குடிக்கும் பிள்ளைவாயில்
பகோடாவை திணிக்கும்
தனியார் ஆரம்பப் பள்ளிகள்
தரைமட்டமாக வேண்டும்.

பணம் ஈட்ட பல வழிகள் இருக்க
பல்லாயிரம் உயிர்களை நோகடித்து
பணம் பார்க்கும் டாஸ்மாக் இல்லாத
பண்டிகை வேண்டும்.

ஏமாறும் கூட்டம் இருந்தால்
எளிதில் விற்றுப் போகும்
எதிர்மறை கருத்தும் என்ற
எச்சமான எண்ணமில்லாத
ஊடகங்கள் வேண்டும்.
நன்றி: திரு முகுந்தன் அவர்களின் மின்னஞ்சல்