Sunday 31 August 2014

நாடுயர நாமுயர்வோம்!-தீவாவளித் திருநாளையொட்டி நடத்தப்படும் கவிதைப்போட்டிக்கான இரண்டாவது கவிதை!


 
நாடுயர  நாமுயர்வோம்!


இன்றைய பாரதத்தின் இளைஞர்களே சிந்திப்போம்!
நன்மைகள் பெருகி நம்நாடு உயர்ந்திடவே
பெண்களுக் கெதிரான வன்முறைகள் ஒழித்திடுவோம்!
கண்கள் அவரென்போம்! காத்திடுவோம் அவர் உரிமை 

 
பஞ்சமிலா நிலையடைய பயிர்வளம் பெருக்கிடுவோம்!
லஞ்சமெனும் பேயை அஞ்சாமல் அழித்திடுவோம்!
பிஞ்சு மனங்களிலே நல்விதைகள் ஊன்றிடுவோம்!
நஞ்சான கொடும்போதை நமையாள அனுமதியோம்! 

 
ஏற்றம்தரும் கல்விதனை எல்லோர்க்கும் அளிப்பதென்று
கற்றோர்  முன்வந்து கல்லாமை இருளொழிப்போம்!
பற்பல துறைகளிலே பாரதம்தான் முன்னோடி!
நற்கல்வி பயிற்றுகையில் நம்பெருமை உணர்த்திடுவோம்! 

 
இந்நாட்டு நதியனைத்தும் எல்லோர்க்கும் பொதுவென்போம்!
தென்னாடும் வளம்காண திட்டமிட்டு நதியிணைப்போம்!
எந்நாளும் இலவசத்தை எதிர்பார்க்கும் நிலைமாற்றி
பொன்னான நல்லுழைப்பால் பொருளீட்டி வாழ்ந்திடுவோம்!

 
வன்முறை வேரறுத்து அன்புநெறி வளர்த்திடுவோம்!
கனிம வளம்காப்போம்! காடுகள் தமைக்காப்போம்!
மூன்றாம் உலகப்போர் நீருக்காய் நேர்ந்திடுமாம்!
வான்வழங்கும் மழைநீரை வளம்காக்கச் சேமிப்போம்!

 
நற்கல்வி ஈன்றபயன் நாட்டிற்கு நாமளிப்போம்!
பெற்றவர் போற்றிடுவோம்! பேணிக் காத்திடுவோம்!
நாட்டைக் காப்பவரை நாமுயர்த்திப் போற்றிடுவோம்!
நாடு உயர்ந்தாலே  நம்வாழ்வும் உயராதோ?

-சே.பவித்ரா

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

No comments:

Post a Comment